யாழ்ப்பாணம், பருத்தித்துறை – தும்பளை வீதியில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதுடன், அவரது பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில் மணியாரம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து தும்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் நெருக்கமாக வந்த மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் ஒன்றன்பின் ஒன்றாக விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது நான்கு வயது குழந்தை ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
குழந்தைக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர், அவரது மனைவி மற்றும் பிள்ளை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அருகருகே பயணித்த நிலையில், அவற்றை முந்திச் செல்ல முயன்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நான்கு மோட்டார் சைக்கிள்களும் மிக நெருக்கமாகப் பயணித்ததுடன், அதிக ஒளிர்திறன் கொண்ட முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியமையும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.







