காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அவற்றை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் அண்மைய நாட்களில் இடம்பெறாமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிலவிய பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக விமான ஓடுபாதையைத் தெளிவாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டதால் விமானங்களின் தரையிறக்கம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் விமான சேவைகள் தடைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாதிருப்பது தமக்கு அதிர்ச்சியளித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, கொழும்பு ஊடாகவே இலங்கைக்கு வருகை தரும் வகையிலான நிலைமை காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகமும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விரு முக்கிய திட்டங்களையும் மேம்படுத்துவதற்கு இந்தியா உதவத் தயாராக இருந்தும், அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியே இடம்பெற வேண்டும் என்ற தென்னிலங்கை சார்ந்த அணுகுமுறையே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாகவும் தொல். திருமாவளவன் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.







