முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அடிப்படையில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பயணத் தடையை நீக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







