கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் வகையில், புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய களனிப் பாலத்தையும் கொழும்புத் துறைமுக அணுகல் மேம்பால நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 5.2 கிலோமீற்றர் நீளமான இந்த வீதி அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பாதையைக் கடக்க வாகனங்களுக்கு சுமார் 5 முதல் 6 நிமிடங்களே தேவைப்படும் என திட்டப் பணிப்பாளர் சுபுன் அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரங்களில், பேஸ்லைன் வீதி ஊடாக கொழும்புக்குள் நுழைய சுமார் 40 நிமிடங்கள் அல்லது அதற்கும் அதிகமான நேரம் செலவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கொழும்புத் துறைமுகம் வரையிலான மேம்பாலப் பகுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஊடாக வாகனங்கள் துறைமுகத்தை நேரடியாகச் சென்றடைய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், துறைமுகத்திலிருந்து காலிமுகத்திடல் வரையான அடுத்தகட்டப் பகுதியின் கட்டுமானப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் கொழும்பு நகர மையத்தை நேரடியாகச் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, 5 முதல் 6 நிமிடங்களில் பயணிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுவது 5.2 கிலோமீற்றர் நீளமான மேம்பாலப் பகுதிக்கு மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.








