சீனாவில் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த மூவரும், சீனாவில் கொள்வனவு செய்த சிகரெட்டுகளை மலேசியா ஊடாக இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 47,000 சிகரெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இவை 235 சிகரெட் பொதிப் பெட்டிகளில் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவருக்கும் தலா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 175,000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







