எஹலியகொடை, பரகடுவ – அங்குருவங்குவ பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வேன் கடத்தப்பட்டமை தொடர்பில் அதன் உரிமையாளர் இன்று (28) முற்பகல் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போதிலும், அதனைச் செலுத்தி வந்தவர்கள் கட்டளையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பயணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேனைப் பின்தொடர்ந்த பொலிஸார், எஹலியகொடை, பரகடுவ அங்குருவங்குவ பகுதியில் வைத்து அதனை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது வேனில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றையவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சந்தேகநபரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







