2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி பொல்தூவ சந்தியில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வித் தொழில்வல்லுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதை முன்னிட்டு இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்குவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய பிரதமர் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதி எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டிசம்பர் முதலாம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்டத்தைத் தொடர்ந்து தமது தொழிற்சங்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும், அவர்களுடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கும் உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனப் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 18ஆம் திகதி போராட்டம் நடத்தியதுடன், கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்ததாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் மேலும் நெருக்கடியான சூழல் உருவாகக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசாங்கம் அச்சுறுத்தும் அணுகுமுறையைக் கையாள்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கங்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்களால் நவம்பர் 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனத் தெரிவித்த அவர், அதனை வெற்றியடையச் செய்வதற்குச் சுதந்திரத் தொழிற்சங்க நிலையம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.








