வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இராணுவத்தினர் காணிகளைப் பயன்படுத்தி வருகின்றனரே தவிர, எந்தவொரு இடத்திலும் காணிகளை அபகரிக்கவில்லை எனப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (28) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மன்னாரில் மாத்திரம் 1,400 ஏக்கர் அரச காணிகளும், 19 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தள்ளாடி சோதனைச் சாவடியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பின்றி விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.







