அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் நிறைவேற்று, நிர்வாக, சுயாதீன மற்றும் அரசியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் மங்கள தபரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்குத் தீர்வு கோரி கல்வி அமைச்சர், பிரதமர் மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்றை நடத்தவும், டிசம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்களையும் இணைத்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களின் பரீட்சைகள், ஆய்வுப் பணிகள், ஆய்வுகூடச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
எனவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







