இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் பகுதிக்கு வருகை தந்த குற்றத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று (3) தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, விசாரணைகளின் பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.