கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுவரும் பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் பயிலுநர்களுக்கு மேலதிக நிதி உதவியை வழங்குவதுடன், எதிர்காலக் கல்விப் பொறுப்புகளை ஏற்க அவர்களைத் தயார்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பிக்கு மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 ரூபா நாளாந்தக் கொடுப்பனவு 50 ரூபாவாகவும், பிக்குகள் அல்லாத மாணவர்களுக்கு வழங்கப்படும் 5 ரூபா கொடுப்பனவு 25 ரூபாவாகவும் 2027 ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், அறநெறிப் பாடசாலைகளின் கல்வித் தரத்தைப் பேணுவதற்காகத் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான வருடாந்தக் கொடுப்பனவும் உயர்த்தப்படவுள்ளது.
தற்போது 7,500 ரூபாவாக வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு, 2027ஆம் ஆண்டு முதல் 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், சீன அரசாங்கத்தின் நன்கொடையாக இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலைச் சீருடைகளை எதிர்வரும் ஆண்டிலும் தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீருடை நன்கொடைத் திட்டத்தை அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கும் தொடர்வதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.







