சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் வரை பாராட்டுப் பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா 100 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 75 மில்லியன் ரூபாவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 50 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
மேலும், சார்க் (SAARC) போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 15 மில்லியன் ரூபாய் வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, குறித்த சர்வதேசப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கும், ஏனைய சர்வதேசப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கும் பாராட்டுப் பரிசுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.







