வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் மீண்டும் இணைக்கும் நோக்கில், ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை’ என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை இலங்கை வம்சாவளிப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியினர் தமது தாய்நாட்டுடனான உறவையும் தொடர்புகளையும் தொடர்ந்து பேணுவதை ஊக்குவிப்பதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.







