பதுளை புஸ்ஸல்லகொல்ல நுகே சந்தி பகுதியிலுள்ள காணியொன்றில் நேற்றுமுன்தினம் (03) திருட்டுத்தனமாக பாக்கு பிடுங்கச் சென்ற இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ஹம்பாவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
உயிரிழந்த இளைஞன் மற்றுமொரு நபருடன் புஸ்ஸல்லகொல்ல பகுதியில் உள்ள பாக்குத் தோட்டங்களில் இரவு வேளையில் பாக்குப் பிடுங்கச் சென்றுள்ளதாகவும் இருவரும் போதைப் பாவனைக்கு அடிமையானவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருடர்களிடமிருந்து பாக்குகளைப் பாதுகாக்கவே பாக்கு மரத்தில் மின்கம்பி போடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவருடன் சென்றதாகக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் இன்று 4ஆம் திகதி காலை பதுளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பதுளை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரையின் பேரிலேயே தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ரத்நாயக்கவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.