நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று 52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அதேபோல் அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 4,1 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்,
வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும்.
வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார்.