ஜனாதிபதியின் அனுமதியை பெற முன்னர் இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவும் தகவல்கள் போலியானதாகும் என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீர்மானங்கள் ஒருசில குழுக்கள் அல்லது நபர்களினால் பொதுமக்கள் மத்தியில் தவறாக பிரதிபலிக்கப்படுவதால் இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அனுமதியை பெற முன்னர் பல இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சில இராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பல போலி தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது.
இராணுவம் என்பது அதிகாரிகள் மற்றும் படைவீரர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இராணுவ வீரர்களின் பதவி உயர் நிலைகள் பிரமிட் முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரமிட் முறைப்படி முதல் கட்டத்தில் பல இராணுவ வீரர்கள் இருந்தாலும் படிபடியாக உயர்ந்து செல்லும் போது அவர்களின் எண்ணிக்கை குறைவடையும்.
ஒரு இராணு வீரர் உயர் பதவிக்கு செல்ல சுமார் 8 வருட காலங்கள் எடுக்கும். ஒரு இராணுவ வீரர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர் பதவிக்கு செல்லவில்லை என்றார் அவர் பணிநீக்கம் செய்யப்படுவார்.
உயர் பதவிக்கு தகுதியுடைய இராணுவ வீரர்களை தெரிந்தெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையின் போது தான் உயர் பதவிக்கு தகுதியுடைய இராணுவ வீரர்கள் யார் எனவும், பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய இராணுவ வீரர்கள் யார் எனவும் தீர்மானிக்கப்படும். இதனை தீர்மானிப்பது இராணுவ ஆட்சேர்ப்பு மற்றும் ஆலோசனை பிரிவு ஆகும்.

இராணுவ ஆட்சேர்ப்பு மற்றும் ஆலோசனை பிரிவினால் தான் இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள். இராணுவ வீரர்களின் செயற்பாடுகள், நாளாந்த நடவடிக்கைகள், தியாகங்கள் , நற்செயல்கள் ஆகியவற்றுக்கு கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையிலேயே இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
தகுதியற்ற இராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய இராணுவத்திற்கு அதிகாரம் உள்ளது. தீய பழக்கங்கள் , ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களிடம் அவர்களது சேவையின் இறுதி தினத்தை அறிவித்த பின்னர் அவர்கள் உரிய தினத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் இராணுவ வீரர்களை உத்தியோகபூர்வமாக பணிநீக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
உத்தியோகபூர்வ பணிநீக்கத்திற்காக பல்வேறு ஆவணங்கள் இராணுவ தலைமையகத்தில் கையளிக்கப்படும்.
இந்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் அனுமதியுடன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இதனை சிலர் தவறாக புரிந்துகொண்டு ஜனாதிபதியின் அனுமதியை பெற முன்னர் இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் போலி தகவல்களை பரப்பி உள்ளனர்.
இராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் பணியில் இணைக்கப்படுவார்கள் எனவும் இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.








