அறுவை சிகிச்சைகளின் போது மயக்கம் ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்துக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதை சில மருத்துவமனைகள் நிராகரித்துள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில், முக்கிய அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் “PROPOFOL” என்ற ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதன் உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள சில மருத்துவமனைகளை சூரியன் செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கமைய நுவரெலியா மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர், “PROPOFOL” என்ற ஊசி மருந்துக்கு எந்தவித தட்டுப்பாடு இல்லையெனவும், போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், அங்கும் போதுமான அளவு “PROPOFOL” ஊசி மருந்து இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேநேரம், கிழக்கு மாகாணத்தில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், அங்கும் போதுமான அளவு ஊசி மருந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








