இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) என்பது அரசாங்கத்தின் செலவீனங்கள் சரியான முறையில் நடக்கின்றனவா, ஊழல்கள் அல்லது மோசடிகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அது தொடர்பான பொறுப்பை ஏற்க வேண்டிய மிக முக்கியமான பதவியாகும் என பொதுஜன பெரமுன பொதுச் செயலாளலர் சாகர காரியவசம் தெரிவித்தார்
மிகவும் துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், கடந்த பத்து மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கவில்லை.
தனக்கு நெருக்கமான, தகுதியற்ற ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க அவர் முயற்சித்தார். ஆனால், எமது அரசியலமைப்பு சபையில் (Constitutional Council) உள்ள சுயாதீன உறுப்பினர்கள் அந்தத் தகுதியற்ற நபரின் நியமனத்தை நிராகரித்தனர்.

தற்போது அந்தச் சபையில் உள்ள மூன்று சுயாதீன உறுப்பினர்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடையவுள்ளது.
அதன் பின்னர், தனக்கு வேண்டியவர்களை அங்கே நியமித்து, தான் சொல்லும்படி கேட்கும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கவே அவர் திட்டமிடுகிறார்.
இந்த ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எவரும் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் பதவியில் கை வைத்ததில்லை. ஆனால், அனுரகுமார திஸாநாயக்க தனது மோசடிகளை மூடிமறைக்கத் தனக்கு நெருக்கமான ஒருவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, உங்களுக்கு நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்: 323 கொள்கலன்கள் (Containers) தொடர்பான மோசடியை மூடிமறைக்க, உங்களுக்கு வேண்டிய ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமித்து பொய் அறிக்கைகளைத் தயாரித்தாலும், நாங்கள் அடுத்த அரசாங்கத்தின் கீழ் , பிமல் ரத்நாயக்கவோ நீங்களோ அல்லது வேறு யாராக இருந்தாலும், இந்த மோசடிக்குக் காரணமானவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.








