கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், 10 க்கு மேற்பட்டவர்களை கொண்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில், வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய, இரண்டு குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று (03) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள் வெட்டு சம்பவம் நடந்த அன்றே விசாரணைகளை மேற்கொண்ட கரடியனாறு பொலிஸார், 3 சந்தேக நபர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கரடியனாறு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








