2026ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் SLBFE-யில் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருந்தாலும், பாதுகாப்பான நாடுகளில் அதிக ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ளனர். இதில் 92,590 பேர் ஆண்களும், 50,497 பேர் பெண்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இஸ்ரேலுக்கு 14,000 பேரை அனுப்பும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,873 பேர் அங்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
மேலும், தென் கொரியாவிற்கு 8,000 இலங்கை தொழிலாளர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதுவரை 4,794 பேர் அந்நாட்டில் பணிக்காக இணைந்துள்ளனர்.
2026ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 73,623 பேர் திறன்சார் தொழில்களிலும், 69,494 பேர் திறன்சாரா தொழில்களிலும் பணியாற்றச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி முதல் ஜூன் வரை), வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








