சீனா தனது விண்வெளி தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், ஷாங்காய் கடற்கரைக்கு அப்பாலுள்ள திறந்த கடலில் இருந்து கிராவிட்டி-1 (Gravity-1) வர்த்தக ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
பெய்ஜிங் நேரப்படி நேற்று (22) காலை 10.54 மணிக்கு தைவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஒன்பது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கிராவிட்டி-1 ஏவுகணையின் முதல் திறந்த கடல் ஏவுதல் என்பதுடன், யாங்சி நதிக்கு அண்மையிலுள்ள கிழக்கு சீனக் கடலில் மேற்கொள்ளப்பட்ட சீனாவின் முதல் வர்த்தக கடல் விண்வெளிப் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளது.
நிலையான ஏவுதளங்களை மட்டும் சார்ந்திருக்காமல், தேவைக்கேற்ப கடலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் இந்த புதிய முறை, ஏவுதளத்தை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யும் வசதியையும், செயற்கைக்கோள் ஏவுதலின் செயல்திறனையும் அதிகரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

மேலும், கடலின் சவாலான சூழல்களிலும் நீண்ட நேரம் தயார்நிலையில் செயல்படும் வகையில் கிராவிட்டி-1 ஏவுகணையின் தொழில்நுட்ப திறன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும் திட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வெற்றிகரமான ஏவுதல், சீனாவின் வர்த்தக விண்வெளித் துறையின் வளர்ச்சியிலும், எதிர்கால கடல் அடிப்படையிலான விண்வெளி நடவடிக்கைகளிலும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.








