வாகரை காரமுனை பகுதியில் வசிக்கும் சில முஸ்லிம் மக்கள், யுத்தத்திற்கு முன்னும் பின்னும் தங்களுக்கு பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதிக்கு பார்வையிடச் சென்ற தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநாத் மற்றும் ஸ்ரீநேசன் முன்னிலையில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லையெனவும், வாகரை பிரதேச செயலகம் தங்களது பிரச்சினைகளில் இழுத்தடிப்பு செய்கிறது எனவும் கூறினர். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,இதைப்பற்றி தாம் பேசுவதாகவும் அத்துடன் தமிழர்கள் முன்னர் வாழ்ந்த பகுதிகளை பார்வையிட வந்ததாகவும், அந்தப் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். யுத்த கால இராணுவ நெருக்கடி காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினர்.
இதனை ஏற்க மறுத்த சிலர், அதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறும், தற்போது காரமுனை என தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் கூறினர். இதன் போது, இரு சமூகங்களுக்குமிடையில் சுமூகமான நிலைப்பாட்டை உருவாக்குவதற்காகவே தாம் அங்கு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்








