அமெரிக்கத் தொழில் அதிபர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்த தனது தொடர்பு குறித்து, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பேசி “நான் செய்த தவறுக்கு பொறுப்பு ஏற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Bill & Melinda Gates அறக்கட்டளை வெளியிட்ட தகவலின்படி, பில் கேட்ஸ் திறந்த மனதுடன் ஊழியர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பில் கேட்ஸ் திறந்த மனதுடன் பேசி, பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார் என்று அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The Wall Street Journal (WSJ) வெளியிட்ட செய்தியின் படி, பில் கேட்ஸ் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், இரண்டு ரஷ்ய பெண்களுடன் உறவுகள் இருந்ததாகவும், பின்னர் அதைப் பற்றி எப்ஸ்டீன் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், “நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. எந்த சட்டவிரோத செயலையும் நான் காணவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜனவரியில் US Department of Justice வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளுக்குப் பிறகு, பில் கேட்ஸ்–எப்ஸ்டீன் உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
70 வயதான மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீது, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களால் எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
WSJ தகவலின்படி, “எப்ஸ்டீனுடன் நேரம் கழித்தது மிகப் பெரிய தவறு” என கேட்ஸ் கூறியதுடன், “அவரைச் சுற்றியிருந்த பெண்களோடு அல்லது பாதிக்கப்பட்டவர்களோடு நான் ஒருபோதும் நேரம் செலவிடவில்லை” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“நான் செய்த தவறால் இதில் இழுக்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்,” என அவர் ஊழியர்களிடம் கூறியதாக அமெரிக்க பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும், 2011 ஆம் ஆண்டில் — எப்ஸ்டீன் சிறுமியை விலைக்கு அழைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவரை சந்தித்ததாக கேட்ஸ் தெரிவித்துள்ளார். அப்போது எப்ஸ்டீனின் பயணங்களுக்கு 18 மாதங்களுக்கான கட்டுப்பாடு இருந்தது பற்றி தெரிந்திருந்தும், அவரின் பின்னணியை முழுமையாகச் சரிபார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

2014 வரை அவரை தொடர்ந்து சந்தித்ததாகவும், வெளிநாடுகளிலும் நேரம் செலவிட்டதாகவும், ஆனால் “ஒருபோதும் இரவு தங்கவில்லை அவரது தீவிற்குச் செல்லவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
தன் முன்னாள் மனைவி Melinda French Gates எப்ஸ்டீன் தொடர்பில் எப்போதும் சந்தேகத்துடன் இருந்ததாகவும், அவளுக்கு நன்றி அவள் எப்போதும் எப்ஸ்டீன் விஷயத்தில் சந்தேகமாகவே இருந்தாள் என்றும் கூறியுள்ளார்.
எப்ஸ்டீன், மற்ற பில்லியனர்களுடன் தன்னிடம் தொடர்புகள் உள்ளதாகவும், கேட்ஸ் ஈடுபட்டிருந்த தொண்டு முயற்சிகளுக்காக நிதி திரட்ட உதவ முடியும் எனவும் கூறியதாக WSJ செய்தி வெளியிட்டுள்ளது.
கேட்ஸ் மற்றும் மெலிண்டா 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.
சமீபத்தில் NPR போட்காஸ்ட் ஒன்றில் பேசிய மெலிண்டா, புதிய கோப்புகள் வெளியானது “என் திருமண வாழ்க்கையின் வலியான காலங்களை மீண்டும் நினைவூட்டியது” என்று தெரிவித்தார்.
“அந்த குழப்பங்களிலிருந்து விலகி இருப்பதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்றும், “மீதமுள்ள கேள்விகளுக்கு அவர்கள் குறிப்பாக என் முன்னாள் கணவர் பதிலளிக்க வேண்டும் நான் அல்ல,” என்றும் கூறினார்.

2019 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணைக்காக காத்திருந்தபோது சிறைச்சாலையில் உயிரிழந்தார்.
முன்னதாக, பில் கேட்ஸ் பேச்சாளர், எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற சில குற்றச்சாட்டுகளை “முழுமையாக பொய்யானவை” என்று மறுத்திருந்தார்.
அறக்கட்டளை வெளியிட்ட தனி அறிக்கையில், எப்ஸ்டீன் “பெரிய அளவிலான தொண்டு நிதியை திரட்ட முடியும்” என்று கூறிய அடிப்படையில் சில ஊழியர்கள் மட்டுமே அவருடன் தொடர்பு கொண்டதாகவும், இறுதியில் எந்த ஒத்துழைப்பும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், எப்ஸ்டீனுக்கு எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும், அவர் அறக்கட்டளையில் ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








