திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருகோணமலை மேல்நீதிமன்றத்தின் HCT/Writ/590/2019 வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த உத்தரவை மீறி, புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் காணப்படும் பகுதியில் பெளத்த விகாரை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், முன்னைய அரசுகளின் காலத்திலும் மக்கள் எதிர்ப்பும் சட்ட நடவடிக்கைகளும் காரணமாக தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டுமானம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் முன்னெடுக்கப்படுவது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டியது சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை என வலியுறுத்தியுள்ள அவர்கள், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் சட்டவிரோதமானவை என நிரூபிக்கப்பட்டால் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.








