இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனித் திங்கள் முன்னிட்டு நடைபெறவுள்ளது.
“ஸ்ரீ தெட்சண கைலாயம்” எனப் புகழப்படும் இப்புனிதத் தலம், மட்டக்களப்பு வாவியும் ஆழிப் பெருங்கடலும் சூழ்ந்த கோட்டையூர் எனும் சிறப்புப் பெற்ற பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்திற்கும் முற்பட்ட வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட இத்திருக்கோவில், இறைவனை மனமார வேண்டி வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களை அருளும் புண்ணிய ஸ்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

இவ்வருடத்திற்கான அலங்கார உற்சவம் 26 மார்ச் 2026 வியாழக்கிழமை ஆரம்பமாகி, பங்குனித் திங்கள் 16 ஆம் நாள் – 01 ஏப்ரல் 2026 புதன்கிழமை உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் நீர்த்தோற்சவம் மூலம் நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து இரவு பூங்காவனம் மற்றும் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுகளும் நடைபெற்று உற்சவம் இனிதே நிறைவடையும்.
திருவிழா காலங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால், பக்தர்கள் அனைவரும் ஆசார சீலத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்து முருகப் பெருமானின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.








