இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2ஆவது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உயர் தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகின்றது.
“ஈரான் இராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் இராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார்.
மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.








