ஐபிஎல் 2026 தொடர் இன்று (28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்குப் பின்னடைவாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி இந்தத் தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது அவர் சிகிச்சையில் இருப்பதால், அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வர்த்தகப் பரிமாற்றம் மூலம் பெறப்பட்ட சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சிஎஸ்கே தனது முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக்கொடுத்து சாம்சனை வாங்கியுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் முழங்கால் பிரச்சினைகள் மற்றும் வயது முதிர்வு காரணமாக, இந்த 19-வது ஐபிஎல் சீசன் அவரது கடைசித் தொடராக இருக்கலாம் என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சிஎஸ்கே நிர்வாகம் இளம் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா மீது ரூ.14.20 கோடி முதலீடு செய்து, தோனிக்குப் பிந்தைய காலத்திற்காக அணியைத் தயார்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. சிஎஸ்கே தனது முதல் போட்டியில் திங்கள்கிழமை குவஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது, ஜடேஜா மற்றும் சாம்சன் ஆகியோர் தங்களது முன்னாள் அணிகளுக்கு எதிராகக் களம் காண்பது இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.








