துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகாமையில் இன்று (07) இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சமரில் மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல்லின் பெசிக்டாஸ் (Besiktas) மாவட்டத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகப் பகுதியை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பதிலடித் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்தான்புல் பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் துப்பாக்கிப் பரிமாற்றத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ‘சிஎன்என் துர்க்’ (CNN Turk) செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைத் துருக்கி பாதுகாப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.








