தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தேரர்கள் இன்று (02) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்படி அவர்களை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திததி நாட்டிற்குள் பிரவேசித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமிதானந்தா என்ற தேரரால் இந்த சட்டவிரோத செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
அதன்படி, கம்பஹா பகுதியில் உள்ள விகாரையில் தலைமறைவாகியிருந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் நாளை (3) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த நபர் இதற்கு முன்பும் பல தடவைகள் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, இதற்கு உதவிய மற்றும் உடந்தையாக செயற்பட்ட ஒருவர் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைகதானவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 7 நாள் தடுப்பு காவல் உத்தரவில் வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.








