அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 33 லீற்றர் கசிப்பு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை புறநகர்ப் பகுதியான வீரமுனை 03 இல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, தன்வசம் 33 லீற்றர் (33,000 மில்லி லீற்றர்) கசிப்பினை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணின் வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, விற்பனைக்காக 22 போத்தல்களில் சூட்சுமமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புத் தொகையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையடி கிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தவிர, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு நபர் கேரளா கஞ்சாவினைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபருக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக் கமைய, ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதான மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராகச் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








