சம்பள முரண்பாடு தீர்த்தல் உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (21) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பொறியியலாளர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அங்கு தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாகவே இந்தத் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட கருத்தொன்றை வெளியிட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுதாபொல பின்வருமாறு தெரிவித்தார்:
“RDA பொறியியலாளர்கள் என்ற ரீதியில், நாம் எமது அதிகாரசபைக்கு வெளியே உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் எனப் பல்வேறு மட்டங்களிலான கூட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகிறோம். இன்று முதல் இவ்வாறான அனைத்துக் கூட்டங்களிலிருந்தும் முழுமையாக விலகியிருக்கத் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் எமக்கு நேரடியாக ஒப்படைக்கப்படாத, ஆனால் தேசியத் தேவையாகக் கருதி நாம் இதுவரை முன்னெடுத்து வந்த ஏனைய வெளிக்களப் பணிகள் அனைத்திலிருந்தும் முழுமையாக விலகியிருக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக, பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்புப் பணிகளில் முடக்க நிலை ஏற்பட்டுப் பாரிய சிக்கல்கள் உருவாகும். எமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து முறையான தீர்வை வழங்கத் தவறும்பட்சத்தில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த எமது சங்கம் தயங்காது” என்று அவர் எச்சரித்துள்ளார்.








