வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டு வரும் அதே வேளையில், களத்தில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே தினத்தில், வெலிமடை – டயரபா தோட்டத்தில் தங்கேஸ்வரன் என்ற தொழிலாளி மாற்றுத் தரப்பினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சப்பாத்துக் கால்களாலும், மண்வெட்டிக் கம்பினாலும் தாக்கப்பட்டதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே நீலகாமம், உடசலாவை, ராகலை போன்ற பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய வடிவேல் சுரேஷ், தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“தொழிலாளர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், ‘அடித்தால் திரும்ப அடி’ என்ற சட்டத்தை நாங்களே கையில் எடுத்து, எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை ஏற்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.
மலையக மக்களின் அரசியல் மற்றும் உரிமைகள் குறித்து உயர்மட்டத் தீர்மானங்கள் எடுக்கப்படும் அதே நேரத்தில், அடிமட்டத்தில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








