நாட்டின் பொருளாதார சவால்களை உடனடியாகக் கையாளக்கூடிய தெளிவான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இலங்கை வம்சாவளியினருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி பதவி தற்போது வழங்கப்பட்டால், 2029 வரை காத்திருக்காமல் உடனடியாகப் பொறுப்பேற்று செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எந்தவொரு பிரச்சினைக்கும் அதன் அடிப்படை காரணத்தை சரியாகப் புரிந்துகொண்டால் தீர்வைக் கண்டுபிடிப்பது எளிதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மையத்தில் அமெரிக்க டொலரின் மீதான அழுத்தமே இருப்பதாகக் கூறிய திலித் ஜயவீர, அதனை சமாளிப்பதற்கு முதலில் அரசியல் தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
உண்மையான மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும், பிரச்சினைகளுக்குப் பிறரை குற்றம் சாட்டும் அரசியல் அணுகுமுறைகள் நாட்டை முன்னேற்றாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் திறமையான பேச்சுவார்த்தைகளை நடத்தி, நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் பொருளாதார மேலாண்மையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பங்கினை முழுமையாக எதிர்க்கவில்லை என்றாலும், அதன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும், சர்வதேச நிதி அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறனின்மையிலும் தற்போதைய நெருக்கடியின் முக்கிய காரணங்கள் உள்ளதாக திலித் ஜயவீர கருத்து வெளியிட்டார்.
அதேவேளை, வலுவான தலைமைத்துவம், சரியான பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மூலமே நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.








