முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தனது ஆட்சி தொடர்ந்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பை 275 ரூபாய் வரை குறைத்திருக்க முடிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பயணம் தொடர்ந்திருந்தால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 275 ரூபாய் வரை கொண்டு வர முடிந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தினாலும் குறைந்தபட்சம் ரூபாவின் மதிப்பை 280 ரூபாய் வரையாவது உயர்த்தியிருக்க முடிந்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார அமைப்புகளை ஒரு வாகனத்தின் பல்வேறு உதிரிப்பாகங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய முன்னாள் ஜனாதிபதி, சிதறிக் கிடந்த அந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு முழுமையான வாகனமாக மாற்றியதே தனது நிர்வாகத்தின் முக்கிய சாதனையாகும் என தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இல்லையெனில் நாட்டின் மீட்சிப் பயணம் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.








