இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க திருப்புமுனையாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்பது நாட்கள் நீடித்த வீழ்ச்சியை முறியடித்து, ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் டாலருக்கு நிகராக வலுவடைந்துள்ளதாக புகழ்பெற்ற நிதிச் செய்தி நிறுவனமான புளூம்பெர்க் (Bloomberg) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று மூன்று வருடங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவிற்கு வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், வெள்ளிக்கிழமை அன்று 2.7% வரை வலுவடைந்தது. இது மார்ச் 2023 இற்குப் பின்னரான அதன் மிகப்பெரிய உயர்வாகும் என புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகள், கடந்த வாரம் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி சந்தையை உலுக்கிய பீதியின் அளவை வெளிப்படுத்துகின்றன. இறக்குமதியாளர்கள் டாலர்களைப் பெற்றுக்கொள்ள அவசரப்பட்டதாலும், ஏற்றுமதியாளர்கள் நாணய மாற்றங்களை தாமதப்படுத்தியதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் ஆண்டின் இதுவரையான (YTD) பெறுமதித் தேய்மானம் சில நாட்களுக்குள் கடுமையாக துரிதமடைந்தது.

மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் தரவுகளின்படி, ரூபாயின் ஆண்டின் இதுவரையான (YTD) பெறுமதித் தேய்மானம் மே 15ஆம் திகதியளவில் 4.5% ஆக இருந்தது, பின்னர் மே 22ஆம் திகதியளவில் அது 7.2% ஆக உயர்ந்தது. இது இந்த ஆண்டில் நாணய மதிப்பில் ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவைக் குறிக்கிறது.
மத்திய கிழக்கு மோதலின் பொருளாதார தாக்கம் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயரும் என்ற அச்சம் காரணமாக சந்தையில் ஏற்பட்ட கடுமையான பதற்றத்திற்கு மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
வாரத்தின் முற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பெறுமதித் தேய்மானத்தைத் தொடர்ந்து, பதற்றமடைந்திருந்த வெளிநாட்டு செலாவணி சந்தையை வழமைக்குக் கொண்டுவர மத்திய வங்கி நடவடிக்கை எடுத்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.








