நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் முட்டை அடங்கிய சோறு பொதியை உட்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்றும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








