கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடியே 84 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 13 சீன பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர் ஏசியா மற்றும் பத்திக் ஏர் விமான சேவைகள் மூலம் இலங்கைக்கு வந்திருந்த இவர்களை, விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்களிடம் இருந்த 22 பயணப் பொதிகளில் இருந்து மொத்தமாக 1 இலட்சத்து 89 ஆயிரத்து 600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடியே 84 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








