களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் பயாகல, மெஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சம்பத் குமாரதுங்க என்பதும், ‘போஞ்சியா’ என அழைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததன் மூலம் கிடைத்த தகவலின் பேரில், அவர் மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெரோயின் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகளில் தொடர்புடையவராகவும் அறியப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று (03) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி காலை களுத்துறை வெட்டுமகடை பகுதியில், காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடியிருந்தது குறிப்பிடத்தக்கது.








