உரிய தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபைகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமாக இயங்கும் இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு பாதுகாவலர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில முதியோர் இல்லங்கள் உயர்தர சேவைகளை வழங்கி வந்தாலும், சில நிலையங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான பணியாளர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தரமற்ற மற்றும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அவற்றுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருவதுடன், அவற்றில் மூன்று முதியோர் பராமரிப்பு நிலையங்கள் அரசாங்கத்தினால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








