இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி அவசரகால தயார்நிலைப் பேரவை (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பல்வேறு பிரபலங்களின் தோற்றம் மற்றும் குரல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த டீப்ஃபேக் (Deepfake) காணொளிகள், நிதி மோசடிகளை முன்னெடுக்கும் நோக்கில் வெளியிடப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.
புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் அடையாளங்களும் இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மக்களை அதிக வருமானம் கிடைக்கும் என நம்பவைத்து முதலீடு செய்ய தூண்டும் மோசடி திட்டங்களுக்கு மேலாக, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான தவறான தகவல்களையும் இந்த போலி காணொளிகள் பரப்பி வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இக்காணொளிகளில் இடம்பெறும் இணைப்புகள் மூலம் பார்வையாளர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என SLCERT பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய இணையவழி மோசடிகள் நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள SLCERT, பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து, தவறான தகவல்கள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.








