அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (B-52 Stratofortress) ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க நேரப்படி நேற்று (15) காலை சுமார் 11.20 மணியளவில் வழக்கமான சோதனைப் பறப்பொன்றுக்காக விமானம் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது. எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அவசர மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இருப்பினும், விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க விமானப்படையின் முக்கிய நீண்ட தூர மூலோபாய குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1950களிலிருந்து சேவையில் உள்ள இந்த B-52 விமானங்கள், வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவையாகும். மேலும், நீண்ட தூரம் இடைநிறுத்தமின்றி பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன.
வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் B-52 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அண்மைய ஆண்டுகளிலும் அவை அமெரிக்காவின் மூலோபாய இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அமெரிக்க விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








