எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, வாகனங்களின் முன்பக்க ஆசனங்களில் பயணிப்போர் மட்டுமன்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னதாக பொதுமக்களுக்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த சலுகைக்காலம் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து, ஜூன் 20ஆம் திகதி முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டம் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








