அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்படவுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் மீள்கட்டமைப்புக்காக 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீட்டு நிதியில் அரைவாசிக்கும் அதிகமான தொகை ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பொருளாதார ஊக்கமாக இந்த நிதியம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியம் முழுமையாக தனியார் துறை முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் எந்தவொரு அரசாங்க நிதியோ மானியமோ இடம்பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, மத்திய கிழக்கு அரபு நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்த நிதிக்கு பங்களிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவருதல், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை தளர்த்துதல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் ஆகிய விடயங்களிலும் இரு தரப்பும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








