நாடு முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டிடங்கள் சேதமடைந்த மற்றும் பராமரிப்பின்றி காணப்படுவதால், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் கல்விக்குத் தேவையான சூழலை உருவாக்கும் வகையில் விடுதிகளில் நிலவும் குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், குறித்த 126 விடுதிகளிலும் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்தி, தேவையான கட்டமைப்பு திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக உள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.








