யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டத்தில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் சிலையை நிறுவுவது தொடர்பான தீர்மானம் வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோது, உறுப்பினர் சிவகுமார் இந்த முன்மொழிவை சபையில் முன்வைத்தார்.
விவாதத்தின் போது, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் தீவகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பதால், அந்த அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலை நிறுவப்பட வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

எனினும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். நயினாதீவு பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதியும் முக்கிய சுற்றுலாத் தலமும் என்பதால், ஒரு மதத்தின் அடையாளத்தை மட்டும் முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக மத நல்லிணக்கத்தையும் தீவகத்தின் பொது அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் சிலையை நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கான நடைமுறை நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.








