முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்காணித்து வருவதாக தெரிவித்து, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தனது முறைப்பாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் சிவில் உடையணிந்த நபர் ஒருவர் தொடர்ந்து தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி, தங்களது தந்தையின் உடல்நிலையைப் பார்வையிட தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த தனது 17 வயது மகளையும் 22 வயது மகனையும் குறித்த நபர் பின்தொடர்ந்து சென்றதாகவும், அவர்களின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை கைத்தொலைபேசியில் பதிவு செய்ததாகவும் மனோரி சலே தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய வைத்தியசாலை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு அருகிலும் இதே நபர் பலமுறை நடமாடியதை தாம் கவனித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி, தங்களை கண்காணித்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளத்தையும், அவர் யாரின் உத்தரவின் பேரில் செயல்பட்டார் என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அதிகார சபையிடம் மனோரி சலே கோரிக்கை விடுத்துள்ளார்.








