வெனிசுலாவில் இன்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியிலிருந்து சுமார் 13.2 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கராகஸில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பு கருதி இடங்களை விட்டு வெளியேறியதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாகவும், இதனால் தலைநகரில் சில கட்டிடங்கள் மேலும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நிலநடுக்கங்களின் தாக்கத்தைத் தொடர்ந்து வெனிசுலா மற்றும் அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








