வவுனியாவில் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வவுனியா லக்சபானா வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சியிலிருந்து காரில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா, மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கஞ்சாவை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன், பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








