பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிக்கக்கூடிய “Tell IGP” திட்டம் 2026 ஆம் ஆண்டிலும் புதிய கட்டமைப்புடன் தொடரப்படுவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சேவையின் மூலம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தங்களது முறைப்பாடுகளை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள், ஊழல் மற்றும் பிற சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை இந்த சேவையின் ஊடாக நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கலாம்.

கிடைக்கும் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பிராந்திய பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, விசாரணை அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள். விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என முறைப்பாட்டாளர் கருதினால், அதே விடயத்தை மீண்டும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ இணையதளம், Tell IGP இணைய தளம் அல்லது மின்னஞ்சல் மூலம் பயன்படுத்த முடியும்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை மேலும் திறம்பட செயல்படுத்தும் நோக்கில், 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான தீர்வுகளை வழங்கும் நோக்கில், இந்தத் திட்டம் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சேவையை www.police.lk என்ற இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ இணையதளம், https://telligp.police.lk என்ற பிரத்யேக இணைய இணைப்பு அல்லது telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்ப முடியும்.







