ஆறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ரி.எம்.வி.பி. கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான இனியபாரதி (கே. புஸ்பகுமார்) எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் மீது, 2005–2009 காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழிருந்த தடுப்புக் காவல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.








